ஏறத்தாழ 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றும் அபூர்வ பச்சைவால் நட்சத்திரத்தை பிப்.10 வரை காணலாம். இது தொடர்பாக விஞ்ஞான் பிரச்சார் அறிவியல் பலகை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் கூறியதாவது: ஒவ்வோர் ஆண்டும் பல நூறு வால்மீன்கள் சூரியனுக்கு அருகே வருகின்றன. அவற்றில் சில மட்டுமே பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. பூமிக்கு அருகே வரும்போது போதுமான பிரகாசத்துடன் இருந்தால் மட்டுமே அதை வெறும் கண்களால் பார்க்க முடியும். பச்சை வால்மீன் எனப்படும் இசட்.டி.எப். வால் நட்சத்திரம் என்ற அரிய வகையைச் சேர்ந்ததாகும்.

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வால்மீன் பூமிக்கு அருகே வந்துள்ளது. இது நள்ளிரவு நேரத்தில் வடமேற்குப் பகுதியில் துருவ நட்சத்திரம் அருகே காட்சி தரும். இதை வெறும் கண்களால் காணலாம். இந்த அபூர்வ வால்மீன் நேற்று நள்ளிரவு முதல் வானில் தென்படத் தொடங்கியுள்ளது. பிப். 10-ம் தேதி வரை இந்த வால்மீன் தென்படும் என்பதால், அனைவரும் இதை கண்டுரசிக்க முடியும். நள்ளிரவு நேரத்தில் சிறு பைனாகுலர் உதவியுடன் வால்மீனைக் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.