கிருஷ்ணகிரியில் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றவரும் அவரது காதல் மனைவி அனுசுயாவிடம் பேசிய நீதிபதி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார்.
எங்கள் வீட்டில் இருந்தவரை அனுசுயா மீது ஒரு குண்டூசி கூட பட்டதில்லை என்று அவரது தம்பி கண்ணீர் மல்க தெரிவித்தார். தண்டபாணிக்கு வழங்கப்படும் தண்டனை இனி யாருக்கும் ஆணவக் கொலை எண்ணமே வரக்கூடாத அளவில் கடுமையாக இருக்க வேண்டும் என்றும் அனுசுயாவின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
கிருஷ்ணகிரியில் மீண்டும் ஓர் உறைய வைக்கும் சம்பவம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கூலித் தொழிலாளி குடும்பத்தில் பிறந்திருந்தாலும், முதுகலை அறிவியலில் வேதியல் பட்டம் முடித்துள்ளார் அனுசுயா. பெற்றோருடன் அக்கா, தம்பி என மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வளர்ந்த அனுசுயாவின் வாழ்க்கை காதல் திருமணம் கொண்ட பின்னர், காதலை ஏற்க மனமில்லாத ஒரு சாதிய வன்மம் கொண்ட ஒருவரால் சின்னாபின்னமாய் சிதைந்துவிட்டது.
மனம் திருந்தியது போல நடித்து வீட்டிற்கு வரவழைத்து அந்த இளஞ்ஜோடியை பெற்ற மகனென்றும் பாராமல் சாதிய ஆணவத்தால் தண்டபாணி அரிவாளால் கண்மூடித்தனமாக கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு ஆணவக்கொலை நடந்த அதிர்வலைகள் ஓயாத நிலையில் மீண்டும் நிகழ்ந்துள்ளது அடுத்த சம்பவம்.