முகப்பு Uncategorized இந்தியா விடுதலை அடைந்ததன் 76-ஆம் ஆண்டை நிறைவு செய்து, 77-ஆம் ஆண்டு விழா..!!

இந்தியா விடுதலை அடைந்ததன் 76-ஆம் ஆண்டை நிறைவு செய்து, 77-ஆம் ஆண்டு விழா..!!

2
0

இந்தியா விடுதலை அடைந்து 76 ஆண்டுகளை கடந்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்த நீண்ட பயணத்தில் பல மைல்கற்களை கடந்திருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம்; நிலவுக்கு மூன்றாவது முறையாக விண்கலம் அனுப்பியிருக்கிறோம்; போர்ப்படை அணிகளை தலைமையேற்று வழிநடத்தும் வீராங்கனைகளைக் கூட உருவாக்கியிருக்கிறோம்; ஆனால், வறுமையை ஒழித்திருக்கிறோமா? அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோமா? இவற்றுக்கெல்லாம் இல்லை என்பது தான் நமது பதில் என்றால், நாம் அடைந்த விடுதலைக்கு எந்த அர்த்தமும் இல்லை.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தது மற்றும் விடுதலை அல்ல. பொருளாதாரம், சமூகம் என எவையெல்லாம் மனிதர்களை அடிமைபடுத்துகின்றனவோ, அவை அனைத்திலும் சமநிலையை உருவாக்கி, அவற்றிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிப்பது தான் உண்மையான விடுதலை ஆகும்.

ஆனால், அந்த விடுதலை நமக்கு கிடைக்கவில்லை என்பதைத் தான் நாங்குநேரி கொடூரங்கள் நமக்கு காட்டுகின்றன. அவை நிகழும் உலகம் அன்பு உலகமாக இருக்காது; அமைதி உலகமாக இருக்காது; அனைத்திலிருந்தும் விடுதலை பெற்ற உலகமாக இருக்காது. அன்பும், அமைதியும் நிறைந்த உலகம் வேண்டுமென்றால் அங்கு சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்திருக்க வேண்டும். அது தான் முழுமையான விடுதலை பெற்ற உலகமாக இருக்கும். அதை உருவாக்குவதற்கான முதல் தேவை சமூக நீதி ஆகும். சமூகநீதி இல்லாமல் சமத்துவத்தையும், சகோதரத்தையும் ஏற்படுத்த முடியாது.

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த நாம், வறுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும். அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க கடுமையாக உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் நாம் உறுதியேற்க வேண்டும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்