முகப்பு Uncategorized கரூரில் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை நீர் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு.

கரூரில் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை நீர் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு.

1
0

கரூரில் இளம் பெண்ணிற்கு கர்ப்பப்பை நீர்க்கட்டியை அகற்ற தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு.

கரூர் மாவட்டம் மணவாசி கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி (21). இவரது கணவர் பாலமுருகன். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. வளர்மதிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்ததால், அதனை அகற்றுவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஶ்ரீ ரத்தினா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த 1ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சர்க்கரையின் அளவு சரிவர இல்லாததால், மேல் சிகிச்சைக்காக நேற்று 5ம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

கோவையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனால், கரூர் ரத்தினா மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை தவறாக செய்ததன் காரணமாகவே வளர்மதி உயிரிழந்துள்ளார் என்று கூறி, கரூரில் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர்.

வளர்மதியின் பிரேதத்தை கோவையிலிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கரூர் எடுத்து வந்து கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்