முகப்பு Uncategorized கரூர் மாவட்டத்தில், ஜவகர் பஜார் மற்றும் கோவை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்.

கரூர் மாவட்டத்தில், ஜவகர் பஜார் மற்றும் கோவை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்.

6
0

கரூர் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகை ஒட்டி துணிக்கடை, நகை கடை, ஸ்வீட்ஸ் & பேக்கரி கடைகளில் அமோகமாக விற்பனை நடந்து வருகிறது. பொதுமக்கள் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக அனைத்து பொருள்களையும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட, எல்லா பொருட்களின் விலையும் ஏற்றத்துடன் காணப்படுகிறது. ஆனாலும் பொதுமக்கள் விலையின் உயர்வை கண்டு கொள்ளாமல் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.  இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட எண்ணெய் விலையும், ஆடை விலையும் பட்டாசு விலையும் அதிகமாக காணப்படுகிறது.

போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கரூர் ஜவகர் பஜார் மற்றும் கோவை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர் நகரின் மைய பகுதியாக உள்ள ஜவஹர் பஜாரில் ஏராளமான துணிக்கடைகள், நகைக்கடைகள், தாலுகா அலுவலகம், கிளை சிறை, மாவட்ட தொழில் மையம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், செயல்பட்டு வருகின்றன. தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை, கரூர் ஜவஹர் பஜாரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில், வரும் 24 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதற்காக புத்தாடைகள், நகைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க, நாள்தோறும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கரூர் ஜவஹர் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வருகிறவர்கள் தங்களது கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக இஷ்டத்துக்கு நிறுத்த விட்டு, பொருட்கள் வாங்க சென்று விட்டு பல மணி நேரத்திற்கு பிறகு வருகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பொதுமக்களிடமிருந்து பணம், நகைகளை கொள்ளையர்கள் அடித்து செல்ல வாய்ப்பு உண்டு. எனவே, கரூர், ஜவஹர் பஜார், கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கும் வகையில், வாகனங்களை நிறுத்துபவர்களின் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஜவகர் பஜாரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக கரூர் ஜவஹர் பஜாரில், போலீசார் சார்பில் உயர்மட்ட கண்காணிப்பு கேமரா கோபுரங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. நாடு முழுவதும் வரும் 24  ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜவஹர் பஜாரில் உள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகளுக்கு பொதுமக்கள் பொருட்களை வாங்க வர தொடங்கியுள்ளனர்.

இதனால், கரூர் ஜவகர் பஜாரில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் செயின் பறிப்பு, பிக் பாக்கெட் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, மாவட்ட காவல்துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் பல இடங்களில், உயர்மட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்