சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம், சின்கோனாவில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது. கடம்பூர், கழுகுமலை, 10; தாளவாடி, 9; பாளையங்கோட்டை, 8; மதுரை, குழித்துறை, 7; நம்பியூர், 6; கயத்தாறு, பேச்சிப்பாறை, 5 செ.மீ., மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில், ஒன்று முதல் 4 செ.மீ., வரையிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

தென் மாவட்டங்களில், வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழகத்தின் வடக்கு பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று காலை வரை, மிக கனமழை பெய்யும்.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில், இன்று காலை வரை கனமழையும் பெய்யும்.
அதன்பின், வரும், 7ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை. சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புஉள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை, படிப்படியாக, 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு வங்க கடலின் தெற்கு பகுதிகளில், வரும், 6ம் தேதியும்; தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில், வரும், 7ம் தேதியும், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அக்னி நட்சத்திரம் இன்று துவங்க உள்ளது. வரும், 29ம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்க வாய்ப்புஉள்ளது.
வழக்கமாக கத்திரி வெயில் என்பது கோடை காலத்தின் மையப்பகுதியாக இருப்பதால், இந்த காலகட்டத்தில், இயல்பான வெப்பநிலையில் இருந்து, 5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிக வெப்பம் பதிவாகும்.