திருச்சி அருகே அதவத்தூரில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பசாமி கோவில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு காளை, யானை, குதிரைகள், ஒட்டகம் ஊர்வலமாக வானவேடிக்கைகள் மேளதாளங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், வயலூர் அருகே அதவத்தூரில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பு, தேரடி கருப்பு, கருவை அய்யனார், சாம்புவன் கோவில் அமைந்துள்ளது.பிரசித்தி பெற்ற ஏகிரியம்மன், பனையடி கருப்பு சித்திரை பெருந்திருவிழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 18ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 25ஆம் தேதி மறு காப்பு கட்டுதலுடன் தினம்தோறும் ஏகிரியம்மன், பனையடி கருப்பசாமி சுவாமி உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது.சித்திரை பெருந்திருவிழாவின் 4ம் நாளான இன்று ஏகிரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்ன வாகனத்திலும், பனையடி கருப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்திலும் எழுந்தருளனர்.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி உற்சவர்கள் காலை யானை குதிரை ஒட்டகம் ஊர்வலமாக வர, செண்டை மேளம், தப்பாட்டம், மேளதாளங்கள் முழங்க, ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், வான வேடிக்கைகளுடன் திருவீதி உலா கண்டனர்.

வழிநெடுங்கிலும் பக்தர்கள் பொதுமக்கள் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.18 ஆண்டுகளுக்குப் பிறகு, நடைபெறும் திருவிழா என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.