பொதுமக்கள் – காவல்துறை நட்புறவை பேணிக்காக்க வேண்டும் என அறிவுரை.

மதுரை சரகத்திற்கு உட்பட்ட மதுரை மாநகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக காவல்துறை இயக்குனர் (டிஜிபி) சங்கர்ஜிவால் தலைமையில் காவல்துறையினரின் மன அழுத்தம் போக்குவது குறித்தும், குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின்போது காவல்துறையினர் பணியின்போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்தும், பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுப்பது, சைபர் கிரைம் குற்றங்களை அதீத கவனத்துடன் கண்காணித்து சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க வேண்டும் எனவும், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

அவ்வப்போது காவல்துறையினருக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.