முகப்பு ஆன்மீகம் நோவாவும், வானவில் உடன்படிக்கையும்…

நோவாவும், வானவில் உடன்படிக்கையும்…

0
0

ஆதாமின் வழித்தோன்றலான லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்குப் பிறந்த மகனே நோவா. நோவாவுக்குப் பெயர் சூட்டியபோது “நாம் விவசாயிகளாகப் பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியை சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்” என்று லாமேக் கூறினார். அது உண்மையாயிற்று. நோவா தன் தந்தையைப்போலவே நேர்மையான மனிதனாக இருந்தார். எனவே நோவாவைக் கடவுள் தேர்ந்துகொண்டார்.

நோவாவுக்கு 500 வயதானபின் அவருக்கு சேம், காம், யாப்பேத் ஆகிய மகன்கள் பிறந்தனர். நோவாவின் குடும்பம் கடவுளுக்கு உகந்த குடும்பமாக வாழ்ந்து வந்தது. நோவா குடும்பத்தைத் தவிர மொத்த மனித இனமும் சாத்தான் காட்டிய தீய வழியில் வாழ்ந்துகொண்டிருந்தது. எங்கும் வன்முறை பரவியிருந்தது. மக்கள் கொடூரமானவர்களாக மாறியிருந்தனர். இதனால் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காகக் கடவுள் மிகவும் வருத்தப்பட்டார். தீய மனிதக் கூட்டத்தையும், மிருகங்கள், ஊர்வன, பறப்பன ஆகியவற்றையும் அழிக்க முடிவு செய்தார்.

எனவே பரலோகத் தந்தை நோவாவை அழைத்தார்.

“கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி மூன்று தளங்கள் கொண்ட ஒரு பெரிய கப்பலைச் செய். கப்பல் 450 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் கொண்டதாக இருக்கட்டும். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி செம்மைப்படுத்து. தேவையான உணவைக் கப்பலில் சேமித்து வை. கவனமாகக் கேள். நான் பூமியில் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து உயிர்களையும் அழிப்பேன். எனவே நீயும் உன் மனைவியும் உன் மகன்களும், மகன்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய்விடுங்கள். பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள். கப்பலில் அவை உயிரோடு இருக்கட்டும்” என்றார்.

கடவுள் சொன்னபடியே நோவா எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான். கடவுள் சொன்னபடியே விலங்குகள், பறவைகள் அனைத்தையும் கப்பலில் ஏற்றித் தன் குடும்பத்துடன் கப்பலில் ஏறி அமர்ந்துகொண்டான்.

கடவுள் பெருமழையை வரவழைத்தார். 40 இரவுகளும், 40 பகல் பொழுதுகளுமாகத் தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்தது. மழையைத் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது. தீய மனிதர்கள் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மடிந்தன. நோவாவும் அவனது குடும்பத்தினரும் உயிர் பிழைத்தனர். வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது. பிறகு கடவுள் தண்ணீரை வற்றச் செய்து, நோவாவின் கப்பலை அரராத் என்ற உயரமான மலையின் மீது தரை தட்டச் செய்தார். நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, ஒரு புறாவை வெளியே அனுப்பினார். ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது.

மேலும் பல நாட்களுக்குப் பிறகு நோவா மீண்டும் புறாவை அனுப்பினார். அன்று மாலையில் திரும்பி வந்த அப்புறா தனது வாயில் ஒலிவ மரத்தின் துளிர்த்த சிறு கிளை ஒன்றை கவ்விப்பிடித்தபடி வந்தது. இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டார். மேலும் பல நாட்கள் கழித்து புறாவை வெளியே அனுப்பியபோது, அது திரும்ப வரவே இல்லை. எனவே அதன் ஜோடிப் புறாவையும் மற்ற விலங்குகள் பறவைகளையும் பூமியில் இறங்க நோவா அனுமதித்தார். அதுவே புதுப்பிக்கப்பட்ட பூமியில் முதல் ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று.

தனக்கு கீழ்ப்படிந்து நடந்த நோவாவுடனும் அவனது வாரிசுகள் மற்றும் மீட்கப்பட்ட உயிர்களோடும் கடவுள் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார்.

“பூமியை இனியொரு முறை நான் வெள்ளப் பெருக்கால் அழிக்க மாட்டேன். இதற்கு அடையாளச் சின்னமாக மேகங்களுக்கு இடையே வானவில்லை உருவாக்கியிருக்கிறேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி” என்றார். அப்போது பூமியில் முதல் வானவில் தோன்றியது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்