முகப்பு ஆன்மீகம் பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் சிவ விரதம்

பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் சிவ விரதம்

1
0

சிவனும், சக்தியும் இணைந்திருக்கும் வடிவமே, ‘உமா மகேஸ்வரர்’ வடிவம். இந்த வடிவத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் நினைத்து இருக்கும் விரதத்திற்கு ‘உமா மகேஸ்வர விரதம்’ என்று பெயர்.

‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை’ என்பார்கள். இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலே, உலகம் இயங்கும் என்பதை வலியுறுத்தும் தத்துவம் இது. அப்படி சிவனும், சக்தியும் இணைந்திருக்கும் வடிவமே, ‘உமா மகேஸ்வரர்’ வடிவம். இந்த வடிவத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் நினைத்து இருக்கும் விரதத்திற்கு ‘உமா மகேஸ்வர விரதம்’ என்று பெயர். பிரிந்த தம்பதியர் இணைவதற்கும், தம்பதியருக்குள் எப்போதும் ஒற்றுமை நிலவுவதற்கும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

அத்ரி மகரிஷிக்கும், அனுசூயா தேவிக்கும் பிறந்தவர், துர்வாசர். இவர் சிறந்த சிவ பக்தர். தவசீலரான துர்வாசர் கொஞ்சம் கோபக்காரரும் கூட. சாதாரணமாக ஒரு முனிவர் கோபம் கொண்டால், அவரது தவத்தின் வலிமை குறையும். ஆனால் துர்வாசர் கோபம் கொண்டால், அவரது தவ வலிமை அதிகரிக்கும். ஏனெ னில் அவரது கோபத்திற்குப் பின்னால், இந்த உலகத்தின் நன்மைகள் அடங்கியிருக்கும்.

ஒரு முறை கயிலை சென்ற துர்வாச முனிவருக்கு, சிவபெருமானின் கழுத்தில் கிடந்த வில்வ மாலை கிடைத்தது. அதனை வழியில் சந்தித்த இந்திரனுக்கு அளித்தார், துர்வாசர். ஆனால் இந்திரன் அந்த மாலையை அலட்சியப்படுத்தியதால், அவனுக்கு சாபம் அளித்து விட்டு, அதே கோபத்தோடு வந்து கொண்டிருந்தார். அப்போது கருடன் மீது வருகை தந்த மகாவிஷ்ணு வைச் சந்தித்தார். மகாவிஷ்ணு, மகாலட்சுமியை சந்திப்பதற்காக விரைந்து வைகுண்டம் சென்று கொண்டிருந்தார்.

மகாவிஷ்ணுவை சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்த துர்வாசர், சிவபெருமானின் வில்வ மாலையை விஷ்ணுவிடம் கொடுத்தார். மகாலட்சுமியை சந்திக்கும் ஆவலில் இருந்த விஷ்ணு, அந்த மாலையை வாங்கி கருடனின் மேல் வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். தான் அளித்த ஈசனின் மாலையை, கழுத்தில் அணி யாது, கருடனின் மீது வைத்த விஷ்ணுவின் மேல், துர்வாசருக்கு கோபம் வந்தது.

தன்னையும், ஈசனையும் விஷ்ணு அலட்சியப்படுத்திவிட்டதாக நினைத்த துர்வாசர், “மகாலட்சுமி வைகுண்டத்தில் இருக்க மாட்டார். அவர் பாற்கடலுக்குள் சென்று விடுவார். பின் ஒரு சமயம், பாற்கடல் கடையப்படும்போது அவர் வெளிப்படுவார்” என்று சபித்துவிட்டார்.

இந்த நிலையில் வைகுண்டத்தில் மகாலட்சுமி இல்லாததால், ஈரேழு உலகங்களுக்கும் சென்று பார்த்தார், மகாவிஷ்ணு. எங்கும் மகாலட்சுமியைக் காணவில்லை. மகாலட்சுமி இல்லாததால், அனைத்து உலகங்களும் லட்சுமி கடாட்சம் இழந்து வறுமையில் வாடின. இதற்கான காரணம், துர்வாசரின் கோபம் என்பதை மகாவிஷ்ணு அறிந்து கொண்டார்.

எனவே அவர் கவுதம முனிவரின் ஆலோசனைப்படி, உமா மகேஸ்வர விரதத்தை கடைப்பிடித்தார். அதன் பயனாக பின்னாளில், அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதற்குள் இருந்து மகாலட்சுமி வெளிப்பட்டாள். உமாமகேஸ்வர விரதத்திற்கு அப்படியொரு மகிமை இருக்கிறது.

விரதம் இருக்கும் முறை

சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம் என்று, சிவபெருமானுக்கு எட்டு விதமான விரதங்கள் இருக்கின்றன. இவற்றில் உமா மகேஸ்வர விரதத்தை ஒருவர் முறைப்படி கடைப்பிடித்து வந்தால், மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

சிவனின் அற்புத வடிவங்களில் உமா மகேஸ்வர வடிவமும் ஒன்று. இறைவனும் இறைவியும் இணைந்த இந்த வடிவத்தை வைத்து மேற்கொள்ளும் விரதத்தைத் தொடங்கினால், தொடர்ந்து 16 வருடங் கள் வரை இருக்க வேண்டும். விரத நாளன்று காலையில் குளித்து முடித்து இறைவனை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து, 16 வகையான பூஜைகளை செய்ய வேண்டும்.

சிலர் உமா மகேஸ்வரர் சிலையை வைத்தும் வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் 16 ஆண்டுகள் கழித்து அந்த சிலையை, ஏதாவது ஒரு சிவன் கோவிலில் சேர்த்துவிட வேண்டும். முதல் ஆண்டு இந்த விரதத்தை தொடங்குபவர்கள் நைவேத்தியமாக அதிரசம் செய்ய வேண்டும். மற்ற ஆண்டுகளில் சிவனுக்கு விருப்பமான எதையும் செய்து படைக்கலாம். பூஜை முடிந்ததும் சிவனடியார்கள், விருந்தினர்களுக்கு உணவிட்டு பிறகே விரதமிருந்தவர்கள் உணவருந்த வேண்டும். இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான்.

 

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்